இட்லரது எதிர்பாராத அதிரடித் தாக்குதலால் ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா நிலைகுலைந்தது என்னவோ உண்மை தான். எங்கும் குழப்பம் நிலவியது. ஒரு சில புல்லுருவிகள் இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டனர். புதிய புரளிகள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் நாட்டைவிட்டி ஓடிவிட்டார் என்ற வதங்திகள் கூட பரப்பப்பட்டன. செம்படையின் தொடந்த பின்வாங்கல் மக்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. தோல்வி மனப்பான்மை வளரத் தொடங்கியது.
மக்களின் பயத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்ட வேண்டும். சோர்ந்து போனவர்களுக்குத் தெம்பூட்ட வேண்டும். பின்வாங்கும் செம்படைகளின் கட்டுப்பாட்டை மேலும் உயர்த்த வேண்டும். அதன் தொடக்கக் கட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். புதிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் ஆயுதத் தளவாடங்களைப் பல நூறு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். செம்படை வீரர்களின் மன உறுதி மேலும் வலிமையாக்கப்பட வேண்டும். பீதியை கிளப்பும் எதிரிகளின் எடுபிடிகளையும். உளவாளிகளையும் தனிமைப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உழைக்கும் வர்க்க முன்னணிப் படையாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் ராணுவக் கட்டுபாட்டை ஏற்படுத்த வேண்டும். இவ்வேலைகளைச் செய்யாமல் போனால் நாடு அடிமைப்படுத்தப்படும்.
இந்த வேலைகள் எளிமையானவை அல்ல. அதுவும் நாடு முழுவதும் எரிந்து கொண்டும், வெடித்துச் சிதறிக் கொண்டும் இருந்த நேரத்தில் இது மேலும் கடினமானது. சாத்தியம் அற்றது என்று கூட சொல்லலாம். சாதாரண மனிதர்களாலோ, தலைவர்களாலோ செய்யவே முடியாத காரியம். ஆனால் இதை ஸ்டாலினால் சாதிக்க முடுயும் என உணர்ந்த மக்கள் அவரை செம்படையின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் ரஷ்யா தன் எதிரியை வீழ்த்த தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. தேசத்தின் மேற்குப் பகுதி எதிரியால் அச்சுறுத்தப்பட்டதால், அங்கிருந்த தொழிற்சாலைகள் அனைத்தையும் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்க்க உத்திரவிட்டார் ஸ்டாலின். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பிரம்மாண்டமான எந்திரங்களின் பிரிக்கப்பட்டப் பாகங்களைச் சுமந்து சென்றனர் தொழிலாளர்கள். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள், காடுகள், மலைகள், பனிப்பாலைவனங்கள் என எல்லா இடர்பாடுகளையும் கடந்து லட்சக்கணக்கான தொழிலாளார்கள் தங்களின் எந்திரங்களோடு நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
எந்திரங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன. பெரும் ஆலைகள் எழுந்தன. அவை ஆயுதத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டன. எந்திரத் துப்பாக்கிகள், டாங்குகள், போர்விமானங்கள் முதலிய நவீனரக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
சோசலிசத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களை செம்படையில் சேருமாறு அறைகூவல் விடுத்தார் ஸ்டாலின். அதை ஏற்று 50 லட்சம் கம்யூனிஸ்டுகள் செம்படையில் சேர்ந்தனர். அபாயகரமான போர்முனைகளில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர். தங்கள் வீரத்தாலும் தியாகத்தாலும் மற்ற வீரர்களுக்கு உணர்வூட்டினர்.
எப்போது வேண்டுமானாலும் மாஸ்கோவை எதிரிகள் கைப்பற்றக்கூடம். அதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாஸ்கோவை விட்டு வெகு தொலைவிற்கு மாற்றப்பட்டன. அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கு குடிபெயர்ந்தனர். ஸ்டாலினையும் மாஸ்கோவையும் விட்டு வெளியேற அனைவரும் நிர்பந்தித்தனர். ஸ்டாலின் இதற்கு சம்மதிக்கவில்லை. இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார்.
இதுவே மக்கள் மனவலிமை இழக்காமல் இருந்ததற்கு காரணம், சோதனைகளை வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உண்டு என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர். சோவியத் ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டாலின் இருந்தார். தான் மட்டும் பாதுகாப்பாக மாஸ்கோவைவிட்டு வெளியேறினால், அது மக்களின் மன உறுதியைக் குலைக்கும் என்று உணர்ந்தார். ஆகவே பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலின் செம்படையுடன் உழைக்கும் மக்களுடன் மாஸ்கோவில் தங்கினார்.
இரவு பகலாக பல மாதங்கள் தொடர்ச்சியாக மாஸ்கோ தாக்கப்பட்டது. எப்போதும் அதன் மீது குண்டு மழை பெய்தது. செம்படை கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு நிர்வாகம் முதலியவற்றை இயக்கும் பொறுப்பை இதன் நடுவே தான் அவர் நடத்த வேண்டியிருந்தது. அவரது இந்த வீரச் செயல் நாட்டு மக்களுக்கு உத்வேகமூட்டியது.
இதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றினார். அதில் பெரிய சொல் அலங்காரம் இல்லை எளிமையாக பேசினார். சக தோழனிடம் பேசுவதைப் போல பேசினார். தங்கள் நட்டை மட்டுமல்ல, உலகத்தையே காப்பாற்றும் வரலாற்றுக் கடமை சோவியத் மக்களுக்கு இருக்கிறது என்றார். உலகையே அழிக்க வந்த பாசிஸ்டுகளை கம்யூனிஸ்டுகளால் மட்டுமே ஒழிக்க முடியும் என்ற உணர்வை ஊட்டினார். "இனி ஒரு அடி பின் வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரைப் போராடுவோம்" என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்றுக் கட்டளையிட்டார். உரையைக் கேட்ட அனைவரையும் அந்தக் கட்டளை தீப்பொறி போல் பற்றிக் கொண்டது. மக்கள் மனதில் அந்த தீப்பொறி எரிமலையானது. அது போர்களத்திலும் வெளிப்பட்டது.
செம்படை உறுதியுடன் எதிர்த்தாக்குதல் தொடுத்தது. உயிரைத் துச்சமென மதித்து செம்படை வீரர்கள் வீரச்சமர் புரிந்தனர். பாவெலின் படைப்பிரிவு முற்றுகை இடப்பட்டது. 500 பேர் இருந்த படைப்பிரிவில் 60 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சியிருந்தனர். ஐந்து நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் பாவெல் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனது தலையிலும் தொடையிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் துப்பாக்கியால் எதிரிகளின் டாங்கிகளை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தான். அவனது சிந்தனையில் ஒரு முழக்கம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. "ஒரு அடி பின்வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை போராடுவோம்".
ஜெர்மானிய போர் விமானங்கள் தாக்கத் தொடங்கின். எங்கும் கருப்புகையும் தூசியும் சூழ்ந்தது. செம்படை இருந்த அகழிகளில் பிணக்குவியல். விமானத்தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மானிய டாங்கிகள் சுட்டபடி செம்படையின் அகழிகளை நோக்கி முன்னேறின. படைப்பிரிவின் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்பாளர் கையில் ஒரு எறிகுண்டை எடுத்தார். உரக்க முழக்கமிட்டார். "கம்யூனிஸ்டு கட்டி வாழ்க! தோழர் ஸ்டாலின் வாழ்க! என்னைப் பின் தொடருங்கள் தோழர்களே."
அகழியின் மீது ஏறினார். ஜெர்மன் டாங்குகளை நோக்கி வேகமாக ஓடினார். பாவெலும் இதர வீரர்களும் எறிகுண்டுகளை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து ஓடினார். முன்னால் ஓடிய கட்சி அமைப்பாளரை ஒரு பீரங்கி குண்டு சிதறடித்தது. பாவெல் ஒரு டாங்கியின் மீது தன் எறிகுண்டை வீசினான். டாங்கி வெடித்து சிதறியது. பாவெலின் தோழர்களும் இதே காரியத்தைச் செய்தனர்.
ஜெர்மானியர்களின் டாங்கிகள் தகர்க்கப்பட்டன. ஏராளாமான இழப்புகள் இருந்தாலும் அன்றைய சண்டையில் செம்படையின் கை ஓங்கியிருந்தது. ஜெர்மானியர்கள் மாஸ்கோவை விட்டு 100 கீலோ மீட்டருக்கு அப்பால் பின்வாங்கினர். முதல் முறையாக பாசிஸ்டுகளுக்கு பலத்த அடி விழுந்தது.
உலகப் போர் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலக மக்களுக்கு இட்லரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை சுடர்விட்டது. பிரிட்டன் - அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்கள் கொடுத்த நெருக்குதலின் காரணமாக அந்த நாடுகள் சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு ஒப்பந்தம் செந்து கொண்டன. ஜெர்மனியில் தலைமறைவாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாசிச எதிர்ப்புப் போராளிகள் மாஸ்கோ சண்டையின் வெற்றியைக் கொண்டாடினர். ரூடி தன் தோழர்களிடம் சொன்னான்;
"சோவியத் ரஷ்யா வெற்றி பெறும் - உலக
உழைக்கும் மக்களுக்கு விடிவு வரும்!
தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment