Monday, November 9, 2009

5. எதிரிகளின் சதியும், அதை முறியடித்த வரலாறும்!

ஆட்சி இழந்த முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினர். சோசலிசத்தை ஒழிக்க 21 ஏகாதிபத்திய நாடுகள் படை எடுத்தன. உள்ளுக்குள் இருந்த துரோகிகள் நாச வேலைகளைச் செய்தனர். எங்கும் குழப்பமான சூழ்நிலை நிலவியது. சோவியத் ரஷ்யா அபாயகரமான நாட்களைக் கடந்து கொண்டிருந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பதிலடிக் கொடுக்க லெனின், "செம்படை" என்னும் மக்கள் படையை உருவாக்கினார்.

செம்படையின் தலைமைத் தளாபதியாக இருந்தவர் டிராட்ஸ்கி. அவர் முதலாளிகளின் கையாள். கம்யூனிஸ்ட் என வேடமிட்டு மற்றவர்களை ஏமாற்றிய நயவஞ்சகர். ஆரம்பத்தில் செம்படை அடைந்த தோல்விகளுக்கு இவரது துரோகமே காரணம். இதனை புரிந்து கொண்ட லெனின், தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்டாலினை முக்கியமான போர்முனைக்குத் தளபதியாக அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் தலைமை ஏற்றுக் கொண்ட பின்பு சீர்கேடுகள் களையப்பட்டன. செம்படையில் கட்டுப்பாடும், கம்யூனிச ஒழுக்கமும் நிலை நிறுத்தப்பட்டன. செம்படை வெற்றி நடைப்போடத் தொடங்கியது. 21 கொள்ளைக்கார நாடுகளின் படைகள் தோற்று ஓடின. லெனின் - ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்கள் வெற்றிப் பெற்றனர்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் சோவியத் மக்களை பேரிடி தாக்கியது. உலகின் முதல் தொழிலாளர் வர்க்க அரசை அமைத்த தோழர் லெனின் 1924ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் மரணமடைந்தார். உழைக்கும் மக்கள் துயரக் கடலில் ஆழ்ந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்ட முன்னாள் பணக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்ட புதிய வியூகம் வகுத்தனர். அவர்கள் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டுத் தொழிலாளர்களைப் போல வாழ முனைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தனர். அதன் தலைமையைக் கைப்பற்றி புரட்சியைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்தனர். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றனர். டிராட்ஸ்கி போன்ற துரோகிகள் அவர்களுக்கு வழிகாட்டினர்.

லெனின் இறந்த பிறகு சோவியத் ரஷ்யாவை வழிகாட்ட சரியான தலைவர் இல்லை என்று இக்கூட்டம் மகிழ்ச்சியில் திளைத்தது. சதித்திட்டங்கள் மூலம் அதனை வீழ்த்திட முடியும் என்றும் நம்பியது.

ஆனால் எதிரிகளின் கனவுகளைத் தகர்த்து தரைமட்டமாக்கினார் ஸ்டாலின். எதிரிகளின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் மண்ணைக் கவ்வ வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஊடுருவி இருந்த எதிரிகள் அம்பலப்படுத்தப்பட்டனர். கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். மக்களுக்கு எதிராக அவர்கள் புரிந்த குற்றங்களுக்காகத் தண்டிக்கபட்டனர். அரசு அதிகாரத்தில் உழைக்கும் மக்களின் தலைமை தக்க வைக்கப்பட்டது. சோவியத்தின் சோசலிசப் பொருளாதாரத்தைப் புனரமைக்க உலகப் புகழ்மிக்க ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் ஸ்டாலின். மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் என்னென்ன என்பதை உழைக்கும் மக்கள் முடிவு செய்தனர். அவை எவ்வளாவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர்களே திட்டமிட்டனர்.

ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் புதிய தொழிற்சாலைகள் நிர்மானம் செய்யப்பட்டன. தரிசு நிலங்கள் மனிதர்களின் உழைப்பால் விளை நிலங்கள் ஆக்கப்பட்டன. வெள்ளப் பெருக்கையும், அழிவையும் ஏற்படுத்தும் ஆறுகளின் திசைகளை மாற்றினர். உபரி நீர், வாய்க்கால்கள் மூலம் பாலைவனங்களில் பாய்ந்தது. பாலைவனங்கள் சோலைவனங்களாயின. தொழிற்சாலைகளையும், கூட்டுப் பண்ணைகளையும் சுரங்கங்களையும் உழைக்கும் மக்களே நிர்வகித்தனர்.

உற்பத்தியைப் பெருக்க உழைக்கும் மக்கள் புதிய உத்திகளைக் கையாண்டனர். புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உற்பத்தி பெருகியது. செல்வம் கொழித்தது. அந்த செல்வம் அனைவருக்கும் உழைப்புக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்டது. வறுமை என்பது பழங்கதையானது. பூமியின் சொர்க்கமாக சோவியத் ரஷ்யா மாற்றப்பட்டது.

ஸ்டாலினுடைய தொலைநோக்கு பார்வை, தளராத மன உறுதி, மக்கள் மீதான நேசம், ஒப்பிட முடியாத தலைமை குணம் போன்றவையே இவ்வெற்றிக்குக் காரணமாகும்

உலகம் முழுவதும் இருந்த சுரண்டல் கூட்டம் இதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டது. ஸ்டாலின் உயிருடன் இருக்கும் வரை தங்களால் உழைக்கும் மக்களை சுதந்திரமாகச் சுரண்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாக தெரிந்தது. அதனால் தான் ஸ்டாலினை ஒழித்துக் கட்ட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் இட்லருக்கு உதவி செய்தன.

இட்லரைத் தீனி போட்டு ஜல்லிக் கட்டு காளையைப் போல வளர்த்தன. வெறியூட்டப்பட்ட அந்த காளை ஸ்டாலினையும், சோவியத் ரஷ்யாவையும் குத்தி கிழிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன?

No comments:

Post a Comment