இட்லர் ஆட்சியில் அமர்ந்த அடுத்த நொடியில் இருந்தே தன் திட்டங்களை அமலாக்கத் தொடங்கினான். அவனது அடியாள் படை நாடு முழுவதும் கலவரத்தை நடத்தியது. யூதர்கள் லட்சக்கணக்கில் கொத்து கொத்தாக படுகொலைச் செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. யூதப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் குழந்தைளைக் கூட விட்டு வைக்காமல் கொன்றனர். மிச்சம் மீதி இருந்தவர்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இட்லரின் அடியாட்படைகள் ஆல்பிரடின் வீட்டையும் கொள்ளையடித்தனர். பிறகு தீ வைத்தனர். ஆல்பிரடின் அண்ணி ஒரு கர்ப்பிணி. வெறி பிடித்த பாசிஸ்டுகள் அவள் வயிற்றைக் கிழித்தனர். (இவர்களுடைய வாரிசுகளும் குஜராத்தில் இதைத்தான் செய்தனர்) கருவை வெட்டித் துண்டாக்கி நெருப்பில் வீசினர். அண்ணியைக் காப்பாற்றப் போராடிய ஆல்பிரடின் மண்டை உடைக்கப்பட்டது. அவனது அண்ணனின் கையும் கால்களும் கட்டப்பட்டு நெருப்பில் வீசப்பட்டான். ஒரு நாய் வண்டிக்குள் வீசப்பட்ட ஆல்பிரடும் சிறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். 30 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். 30 இலட்சம் யூதர்கள் சிறை முகாம்களில் வதைக்கப்பட்டனர்.
யூதர்களை அழிக்கும் போதே கம்யூனிஸ்டுகளையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. இட்லர் கம்யூனிசத்தை அடியோடு வெறுத்தான். கம்யூனிஸ்டு கட்சியோ உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போராடியது. உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த முதலாளிகள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆயினர். உழைத்த மக்கள் மேலும் லேலும் ஏழைகள் ஆயினர். இட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளார்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது. வேலை நேரம் 12 முதல் 16 மணி நேரமாக அறிவிக்கப்பட்டது. உழைப்பாளிகள் போராடி பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன. உரிமைக்காக போராடும் மக்களை அடித்து நொறுக்கியது பாசிச இட்லரின் அடியாள் படை. இதற்கெல்லாம் நன்றி கடனாக இட்லரின் ஆட்சிக்கு முதலாளிகள் முழு ஆதரவு அளித்தனர். பாசிச இட்லரின் அடியாள் படைக்குப் பணத்தை வாரியிறைத்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.
முதலாளிகளோ வேலை நேரத்தை அதிகரித்து தொழிலாளர்களைக் கசக்கி பிழிந்தனர். தொழிலாளர் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் பிடித்து பாசிஸ்டுகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் தொழிலாளர்களுக்காக போராடிய தோழர் ரூடியின் தலைக்கும் குறி வைத்தான் அவனுடைய முதலாளி. ஆனால் ரூடியை பிடிக்க முடியவில்லை. கம்யூனிஸ்டு கட்சியின் திட்டப்படி தலைமறைவு ஆனார். சோர்ந்து போய்க் கிடக்கும் மக்களை தட்டி எழுப்பிப் போராடுவதற்கு உணர்வூட்டும் பணியை இரகசியமாக மேற்கொண்டார்.
ஆனால் ரூடியின் குடும்பத்தினர் தப்பிக்க முடியவில்லை. ரூடியின் மனைவியும் குழந்தைகளும் வீட்டோடு வைத்து கொளுத்தப்பட்டனர். இப்படி பல இலட்சம் கம்யூனிசப் போராளிகளும் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர்.
இட்லரின் இரத்தவெறி இதோடு அடங்கவில்லை தன்னுடைய பாசிசக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத அனைவரையும் கொலை செய்தான். பாசிஸ்ட் கட்சியைத் (நாஜிக் கட்சி) தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கைச் செய்திகள் பாசிஸ்டுகளால் தணிக்கைச் செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டன. நீதிபதிகளாக இட்லரின் கைக்கூலிகள் அமர்த்தப்பட்டனர்.
பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. மாணவர்களுக்கு அறிவியல் கருத்துகளுக்குப் பதிலாக பிற்போக்குக் கருத்துகள் போதிக்கப்பட்டன. ஜெர்மனி முழுவதும் திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டது. உழைக்கும் மக்கள் அனைவரும் அடிமையாக்கப்பட்டனர். பாசிஸ்டுகளோ எக்காளமிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment