அன்றைய இரவு பெர்லினின் மூலை முடுக்குகளில் எல்லாம் சண்டை நடந்தது. நள்ளிரவில் பெர்லினுடைய மையப் பகுதியை அடைந்தது செம்படையின் முன்னணிப் படை. தோல்வி தன் வீட்டு வாசலைத் தட்டியவுடன் குப்புற விழுந்தான் இட்லர். ஒரு கோழையைப் போல தற்கொலை செய்து கொண்டான். கோடிக்கணக்கான மக்களைக் கொன்ற பாசிஸ்டு ஒழிந்தான்.
அவன் தற்கொலை கொள்ளும் முன் தன் பாசிஸ்டு படைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தான். "எக்காரணம் கொண்டும் செம்படையிடம் மட்டும் மண்டியிடாதீர்கள்". இதுவே இந்த உத்தரவு. இட்லர் இறந்த பின்னும் பாசிஸ்டுகளின் படை சண்டையிட்டது.
முன்னணிப் படையில் குறைவான எண்ணிக்கையிலே வீரர்கள் இருந்ததால் செம்படையின் பணி கடினமாகியது. இருந்தாலும் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து விடிவதற்குள் பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டது. கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பொழுது ஏறிக் கொண்டே இருந்தது. பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது செங்கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற தோழர் ஸ்டாலினுடைய கட்டளையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதை நிறைவேற்ற யெகராவ், கண்டாரியா என்ற இரு செம்படை வீரர்களும் முன் வந்தனர். கையில் செங்கொடியுடன் குண்டு மழைக்கு நடுவே பாய்ந்தோடி பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இதற்குள் கட்டிடத்தில் இருந்த பாசிஸ்டுகள் அதற்கு தீ வைத்தனர். கட்டிடம் முழுவதும் பரவிய புகையானது கண்களை மறைத்தது. தகிக்கும் வெப்பமும் கடுமையாக இருந்தது. இதற்கிடையில் உச்சிக் கோபுரத்திற்கு செல்லும் படிக்கட்டைக் கண்டுப்பிடித்து மேலே ஏறினர் யெகராவும், கண்டாரியாவும்.
சிறிது நேரத்தில் அவர்கள் அந்த மிக உயர்ந்தக் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்றார்கள். வழுக்கும் உச்சி கோபுரத்தின் மீது உறுதியாக ஏறத் தொடங்கினார்கள். பக்கத்துக் கட்டிடத்தின் மதில் சுவருக்கு பின்னால் இருந்து இயந்திரத் துப்பாக்கியால் அவர்களை சுடத் துவங்கினான் ஒரு ஜெர்மானியன்.
இதைப் பார்த்து கொண்டிருந்த பாவெல், அவர்களுக்கும், செங்கொடிக்கும் ஸ்டாலினுடய சூளுரைக்கும் நேரவிருந்த ஆபத்தைப் புரிந்து கொண்டான். தன் துப்பாக்கியால் சுட்டபடி எதிரியின் எந்திரத் துப்பாக்கியை நோக்கி ஒடத் தொடங்கினான். எந்திரத் துப்பாக்கி தன் திசையை மாற்றியது. பாவெலைக் குறி வைத்து சுட்டது. குண்டுகள் பாவெலுக்குள் ஊடுவருவி வெடித்துச் சிதறின.
பாவெலோ தான் வைத்திருந்த எறிகுண்டை வீசியெறிந்தான். எந்திரத் துப்பாக்கி நொறுங்கியது. கீழே விழுந்த பாவெல் அண்ணாந்து பார்த்தான். ஜெர்மானிய பாராளுமன்றத்தின் மேல் செங்கொடி பறந்துக் கொண்டிருந்தது. பாவெலின் தோழர்கள் ஸ்டாலினுடைய சூளுரையை நிறைவேற்றி விட்டனர். இரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பாவெலின் முகம் புன்னகைத்தது. செங்கொடியைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.
பாசிச எதிர்ப்புப் போரில், எதிரியை வீழ்த்த உயிர்நீத்த கோடிக்கணக்கான தியாகிகளில் ஒருவனாக பாவெல் மாறினான். அவர்களின் தியாகம் வீண்போகவில்லை. பாராளுமன்றக் கட்டிடத்தில் செங்கொடி ஏறியவுடன் பாசிசக் படைகள் சரணடைந்தன. 14 ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைத்த பாசிசக் கூட்டம் உழைக்கும் மக்கள் படையிடம் மண்டியிட்டது.
உலகின் உழைக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர். சோவியத் ரஷ்யாவிற்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உழைக்கும் மக்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். எங்கு பார்த்தாலும் செங்கொடிகள், ஸ்டாலின் படங்கள். பாசிசத்தை கம்யூனிசம் வென்றது. எதிர்காலம் கம்யூனிசத்திற்கே என்பது நிரூபணமானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment