உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும், மனித நேயத்தையும் நேசிக்கும் மக்கள், இட்லரின் வெற்றியால் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன. ஏகாதிபத்தியவாதிகளால் இட்லர் போற்றி புகழப்பட்டான். இட்லரின் பாசிசப் படைக்கு இலவசமாக ஆயுதங்கள் வழங்கினார்கள். மிக உயர்ந்த இராணுவத் தொழில் நுட்பங்களைக் கற்று கொடுத்தனர். இதைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய இராணுவத்தை இட்லர் உருவாக்கினான்.
மனித மிருகமான இட்லரை ஏகாதிபத்திய நாடுகள் ஏன் வளர்த்துவிட்டன? உலகின் முதல் சோசலிச நாடான சோவியத் ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும். லெனினுக்குப் பிறகு சோசலிசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட தோழர் ஸ்டாலினையும் கொலை செய்ய வேண்டும். இதுவே அந்த நாடுகளின் விருப்பம். இட்லரும் சோவியத் ரஷ்யாவைத் தோற்கடித்து அடிமையாக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்தான்.
சோவியத் ரஷ்யாவை அழிப்பதில் இந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏன் இவ்வளவு வெறி?
ரஷ்ய தொழிலாளர்கள் தோழர் லெனின் தலைமையில் புரட்சி செய்து நவம்பர் 7, 1917இல் அதிகாரத்தை கைபற்றினர். ஆயிரம் பேர் பட்டினியாக சாகவும், அவர்களை சுரண்டும் ஒருவன் சுகபோகமாக வாழவும் காரணமாக இருந்த சுரண்டல் ஒழிக்கப்பட்டது. ஆற்றலுக்கு ஏற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற கோட்பாடு அமலுக்கு வந்தது. சோசலிச (சமத்துவ) சமூகம் அமைக்கப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டது.
சோவியத் ரஷ்யாவை அழிப்பது போலவே தோழர் ஸ்டாலினையும் எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இட்லரும் அவரை தனது சொந்த எதிரியாகக் கருதினான். எல்லா நாட்டு முதலாளிகளின் பத்திரிக்கைகளும் ஸ்டாலினைப் பற்றி அவதூறான செய்திகளையேப் பரப்பின. முதலாளித்துவ சுரண்டல் பேர்வழிகளோ அவர் மீது வெறுப்பைக் கக்கினர். அப்படி என்றால் யார் இந்த ஸ்டாலின்? ஏன் அவரை மட்டும் இவர்கள் இப்படி வெறுக்க வேண்டும்?
பணக்கார நாடுகளிலோ ஒருவன் பணக்காரன் என்றால் ஆயிரமாயிரம் பேர் ஏழைகள். அத்தனைப் பேரையும் சுரண்டித்தான் ஒருவன் கொழுக்கிறான். சோவியத் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றி இந்த நாடுகளில் உள்ள ஏழைகள் கேட்டறிந்தனர். அதற்குக் காரணமான கம்யூனிசத்தையும் புரட்சியையும் நேசித்தனர். இது தான் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலாளிகளை பீதியில் தள்ளியது. தங்கள் நாட்டிலும் தொழிலாளர்கள் புரட்சியை நடத்திவிடிவார்களோ என்று அஞ்சினர். ஏழைகளைச் சுரண்டிக் கொழுப்பதற்கு தாங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்தை தொடர்ந்துப் பாதுகாக்க எதையும் செய்யத் தயாராக இருந்தனர். அதனால் தான் சோவியத் ரஷ்யாவை அழிக்க இட்லருக்கு எல்லாவித உதவிகளையும் செய்தனர்.
அதுமட்டுமல்ல, இந்த பணக்கார நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க ஏழை எளிய நாடுகளைச் (காலனி நாடுகள்) சுரண்டிக் கொள்ளை அடித்தே பணக்கார நாடுகள் (ஏகாதிபத்திய நாடுகள்) செல்வங்களைக் குவித்தன. சோவியத் ரஷ்யாவோ இவர்கள் அடிமைப்படுத்திய ஏழைக் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. அதற்கான சகல உதவிகளையும் செய்தது. அடிமைத்தனத்தையும் அறுத்தெறியும் கலையைக் கற்று கொடுத்த சோவியத் ரஷ்யாவைக் கண்டு பீதியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் இட்லரை ஆதரித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment