Monday, November 9, 2009
6. இட்லரின் கோரமுகம்!
இட்லரின் நோக்கம் சோவியத் ரஷ்யாவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமல்ல பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா பொன்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய நாடுகளான ஆசிய, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளையும் அபகரிக்க வேண்டும் என்பதும் அவனுடைய நோக்கமாக இருந்தது.
இத்திட்டத்திற்கு குறுக்கே நின்றது சோவியத் ரஷ்யா மட்டும் தான். அதை வீழ்த்துவது எளிதான காரியமல்ல என அவனுக்குத் தெரியும். அதனால், முதலில் பிற ஐரோப்பிய நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றின் வளங்களைப் பயன்படித்தி சோவியத்தின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டினான்.
ஜெர்மனியைப் போலவே இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தனர். இட்லர் அவர்களோடு இராணுவக் கூட்டணி அமைத்துக் கொண்டான். அதன் பின்னரே தனது கோரமுகத்தை வெளிபடுத்தினான்.
1937இல் ஸ்பெயினில் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மக்கள் குடியரசு இட்லரின் கண்களை உறுத்தியது. அவனுடன் இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியும் சேர்ந்து கொண்டான். இரு நாட்டு படைகளும் ஸ்பெயினை ஆக்கிரமித்தன. மக்கள் குடியரசு கலைக்கப்பட்டது. பாசிசப் பேயாட்சி தொடங்கியது. ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காக்கப் போரிட்ட லட்சக்கணக்கானப் போராளிகள் கொல்லப்பட்டனர்.
அடுத்ததாக 1938ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரியா மீது படையெடுத்தான். ஜெர்மன் ராணுவத்தின் மிருக பலத்தின் முன் நிற்க முடியாமல் ஒரே நாளில் ஆஸ்திரியா சரணடைந்தது. அதே வேகத்தில் செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து பாதி நாட்டைப் பிடித்துக் கொண்டான்
இட்லரின் கோரமுகம் வெளிப்பட்டவுடன் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சோவியத் ரஷ்யா இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது. இட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பிரிட்டன், பிரான்சு, அமெரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.
அந்தந்த நாடுகளின் மக்களும் இதையே விரும்பினார். ஆனால் முதலாளிகளோ பாட்டாளிகளின் தலைவரான ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பதை நிராகரித்தனர். மாறாக இட்லருடன் புதிய நட்புறவு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டனர்.
ம்யூனிச் ஒப்பந்தம் என்ற இந்த துரோக ஒப்பந்தம் இட்லரின் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தியது. பிரிட்டனும் பிரான்சும் தன்னை ஒன்றும் செய்யாது என்பதைப் புரிந்து கொண்ட இட்லர் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினான்.
செப்டம்பர் 15, 1939இல் செக்கஸ்லோவாகியாவை முழுமையாக ஆக்கிரமித்தான். 5 நாள் கழித்து லித்வேனியாவை வீழ்த்தினான். அதே வேளையில் இத்தாலியோ அல்பேனியாவையும், லிபியாவையும் வீழ்த்தியது. சீனா மங்கோலியா மற்றும் இதர கிழக்காசிய நாடுகளை ஜப்பான் அடிமைப்படுத்தியது.
இதே ஆண்டு செப்டம்பர் மாதம் இட்லர் போலந்தை ஆக்கிரமித்தான். ஒரே நாளில் டென்மார்க், நார்வே, ஹாலந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் விழுங்கினான். நார்வேக்கு ஆதரவாக பிரிட்டன் தனது கடற்படையை அனுப்பியது. ஆனால் பாசிஸ்டுகளின் படைபலத்தைக் கண்டதும் போரிடாமலே பின்வாங்கியது.
ஜெர்மனிக்கு இணையான ஆயுதபலம் கொண்டது பிரான்சு. அதனால் கூட பாசிஸ்டுகளின் மூர்க்கத்தனத்தின் முன் நிற்க முடியவில்லை. சுமார் இருபது நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்சு ஒரு சில நாட்களிலேயே இட்லரின் காலில் விழுந்தது. யுகோஸ்லோவியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா போன்ற நாடுகளின் கதையும் முடிந்து விட்டது. பிரிட்டன் சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இட்லரின் காலடியில்.
அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டது. தேசபக்தர்கள், கம்யூனிஸ்டுகள், யூதர்கள், கறுப்பர்கள் என லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி பொதுமக்களை சித்ரவதை செய்துக் கொல்வது பாசிஸ்டு படைகளின் பொழுது போக்கு ஆனது. படுகொலைகள், தீ வைப்பு, பாலியல் வன்முறைகள் என நெருப்பில் வெந்தது ஐரோப்பா.
மற்ற கண்டங்களின் மீது பாய்ந்து கடித்துக் குதற பாசிஸ்டுகள் தயாரிப்பில் இறங்கினர். வரப்போகும் அபாயம் உலக மக்களுக்கு உறைத்தது. பீதியில் இரத்தம் உறைந்தது.
அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என ஒதுங்கிக் கொண்டன. இட்லருடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்து கொள்ளவும் முயற்சித்தன. உலகையே பாசிச இருள் சூழ்ந்த நேரத்தில் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டியது சோவியத் ரஷ்யா. அந்த நேரத்தில் உலகின் உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது சோவியத் ரஷ்யாவும் ஸ்டாலினும் தான்.
அந்த் நம்பிக்கைக்கும் சோதனை வந்தது. 22 ஜூன் 1941. நள்ளிரவு நேரம் 50 லட்சம் பேர் கொண்ட பாசிஸ்டுகளின் படைகள் கள்ளத்தனமாக ரஷ்யாவிற்குள் நுழைந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment