Monday, November 9, 2009

4. யார் இந்த ஸ்டாலின்?

தோழர் ஜோசப் ஸ்டாலினோ ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். ரஷ்யாவின் ஜார்ஜிய மாகாணத்தில் 'கோரி' என்ற நகரத்தில் 1879 டிசம்பர் 21-ந் தேதி பிறந்தார். தாயார் பணக்கார வீடுகளில் சமையல் வேலை பார்த்தார். கொடிய வறுமையில் ஸ்டாலின் வளர்த்தார். பட்டினியின் நடுவே படித்தாலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். மகனை மேல் படிப்புப் படிக்க வைத்திட வேண்டும் என ஸ்டாலினுடைய தாயார் இரவு பகல் பாராமல் உழைத்தார். இறுதியாக பாதிரியார் படிப்பிற்கான கல்லூரியில் தனது மகனை சேர்த்து விட்டார்.

அந்த பாதிரியார் கல்லூரியோ ஒடுக்குமுறைகளின் மொத்த உருவமாக இருந்தது. ரஷ்ய மன்னனான ஜாருக்கு சேவகம் செய்யப், படித்த அடிமைகளை உருவாக்குவதே அக்கல்லூரியின் நோக்கம். மாணவர்கள் சிறைக் கைதிகளைப் போல நடத்தப்பட்டனர். ஸ்டாலின் அக்கல்லூரியை வெறுத்தார். அதே நேரம் அருகில் இருந்த ஒரு நூலகத்திலிருந்து ஏராளமான நூல்களை எடுத்துப் படித்தார். அப்படி அவர் எடுத்துப் படித்த நூல்களில் ஒன்று தான் காரல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்".

அந்த நூல் தான் ஸ்டாலினுடைய வாழ்க்கையில் அவர் போக வேண்டியப் பாதையைக் காட்டியது. ஒரு சிலர் மட்டும் எல்லா செல்வங்களையும் அபகரித்துக் கொள்ள மற்றவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏன் ஏற்பட்டது என "மூலதனம்" விளக்கியது. ஒரு புரட்சியின் மூலம் தான் உழைக்கும் மக்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அது வழிகாட்டியது.

மார்க்ஸ் காட்டிய கம்யூனிசப் பாதையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். அதே காலகட்டத்தில் லெனின் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தார். ரஷ்யா முழுவதும் கம்யூனிசக் குழுக்கள் உருவாக்கபட்டன. தன்னுடைய ஊரிலும் ஸ்டாலின் அத்தகைய குழுக்களைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கினார். அறியாமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த உழைப்பாளிகளுக்குப் புரட்சி பற்றிய அறிவியலைப் போதித்தார்.

ஸ்டாலினுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலனும் கிடைத்தது. ரஷ்யாவில் ஜார் மன்னனது கொடுங்கோலாட்சிக்கு எதிராக 1901-ஏப்ரலில் ஜார்ஜியத் தொழிலாளர்கள் ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் தோல்வியில் முடிந்தாலும், தொழிலாளர் வர்க்கம் சோர்ந்து விடவில்லை. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினை வேட்டையாட போலீசும், இராணுவமும் குவிக்கப்பட்டது. ஸ்டாலின் தலைமறைவு ஆனார்.

இப்போராட்டமானது ரஷ்யத் தொழிலாளர்களுக்கு உத்வேகமூட்டியது. இதற்கு தலைமை ஏற்று நடத்தியதன் மூலம் ஸ்டாலின் லெனினது கவனத்தை ஈர்த்தார். தன்னுடைய திட்டங்களை அமலாக்கிட ஒரு அருமையான செயல்வீரர் கிடைத்து விட்டதாக லெனின் மகிழ்ந்தார். அன்று தொடங்கிய லெனின் ஸ்டாலின் தோழமையுறவு இறுதி வரைத் தொடர்ந்தது.

முழு நேரப் புரட்சியாளராக மாறிய ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளை ரஷ்யா முழுவதும் பரப்பினார். அவரது உழைப்பின் பயனாக நாடு முழுவதும் கட்சியின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதனால், ஸ்டாலினை ஒழித்துக் கட்ட ஜாரின் போலீசு அதிக தீவிரம் காட்டியது. அவர் ஆறு முறை கைது செய்யப்பட்டு சைபீரியப் பனிப் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் சிறையில் இருந்து தப்பினார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த லெனின் அங்கிருந்து திட்டங்களை வகுத்துக் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார். ரஷ்யாவில் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை ஒரு தலைமை குழுவிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் அக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லெனின் திட்டங்களைத் தீட்டினார். ஸ்டாலின் அதனை நிறைவேற்றினார். அவர்களின் உழைப்பின் பயனாக நவம்பர் 7, 1917இல் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கிய நாள் வந்தது. புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சுரண்டல் ஒழிக்கப்பட்டது. சோசலிசம் மலர்ந்தது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. லெனினது தலைமையில் வறுமையை ஒழித்து முதன்முதலாக பூமியில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் முயற்சியில் சோவியத் ரஷ்ய மக்கள் ஈடுபட்டனர். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் சோசலிச சமூகத்தைத் தானே உழைப்பவர்களின் சொர்க்கம் என்று சொல்வதுப் பொருத்தமாக இருக்க்கும். ஆனால் அந்த முயற்சியின் ஒவ்வொரு அடியிலும் எதிரிகள் குறுக்கிட்டனர்.

No comments:

Post a Comment