உலகையே அச்சுறுத்தியப் பாசிசத்தை ஒழித்து இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தனர் சோவியத் மக்கள். இதற்கு அவர்கள் புரிந்த தியாகம் ஈடு இணையற்றது. பாசிஸ்டுகளை வீழ்த்த் 3 கோடி ரஷ்யர்கள் உயிர் துறந்தனர். 1710 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 70,000 கிராமங்கள் முற்றாக எரிக்கப்பட்டன. 32,000 பெரிய ஆலைகளும் 98,000 கூட்டுப் பண்ணைகளும் அழிக்கப்பட்டன.
இத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் அவர்கள் மனம் தளராமல் போராடினார்கள். இட்லரின் பெயரைக் கேட்டதும் அஞ்சி நடுங்கின மற்ற நாடுகள். அமெரிக்காவும், பிரிட்டனும் முக்காடு போட்டு ஒளிந்து கொண்டன. இப்படி எல்லோரையும் பயமுறுத்திய இட்லரை சோவியத் ரஷ்யா வீழ்த்தியதன் ரகசியம் என்ன? சோதனைகளைத் தாங்கி கொண்டு எதிரிக்கு பதிலடிக் கொடுக்கும் மன உறுதியை சோவியத் மக்கள் பெற்றதன் மர்மம் என்ன?
இதற்கெல்லாம் ஒரே பதில் பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலினும், சோவியத் செம்படை வீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான். சோவியத் மக்களின் பலத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஸ்டாலின், சொகுசாக பதவிக்கு வந்தவர் அல்ல. புரட்சி எனும் போராட்டக் களத்தில் வார்த்தெடுக்கப்பட்டவர். லெனினது கம்யூனிஸ்ட் கட்சி என்னும் பல்கலைக்கழகத்தில் தன் திறன்களை வளர்த்துக் கொண்டவர். லெனினுக்கு பிறகு சோசலிசத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் கட்டிப் பாதுகாத்தவர்.
இக்கட்டான சூழ்நிலைகளிலும் கலக்கமடையாமல் பொறுமையோடும் உறுதியோடும் பிரச்சனைகளைக் கையாள்வதில் சிறப்பு இயல்பை கொண்டவர்.
ஸ்டாலின் தோல்வியைக் கண்டு துவளமாட்டார். அதிலிருந்து பாடம் கற்று, மீண்டும் போராடி வெற்றி பெறுவார். ரஷ்யப் புரட்சியில் தோல்வி ஏற்பட்ட போர்முனைகளுக்கெல்லாம் ஸ்டாலினைத் தான் அனுப்பினார் லெனின். ஸ்டாலின் தோல்விகளை வெற்றியாக மாற்றியதால், புரட்சி வெற்றி பெற்றது. இட்லருக்கு எதிரான போரில் செம்படையானது பாதி வீரர்களை இழந்தபோதும் பின்வாங்கியபோதும் ஸ்டாலின் துவண்டு விடாமல் முனைப்புடன் போராடியவர்.
சாதாரண காலத்திலேயே அவர் கடுமையாக உழைப்பார். போர் மூண்டாலும் ஒவ்வொரு நாளும் 20 மணி நேரம் வேலை செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி, அரசு நிர்வாகம் ஆகிய மூன்றையும் திறம்பட வழிநடத்தும் பணியையும் செய்தார். அதற்காக திட்டமிடுதல், விவாதித்தல், கூட்டங்களில் பேசுதல், திட்டங்கள் அமுலாவதை கண்காணித்தல், சோர்வுற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுதல் என ஓய்வின்றி இரவு பகலாக உழைத்தார். தொடர்ச்சியாக பல நாட்கள் உண்ணாமல் உறங்காமல் வேலை செய்தார்.
அவர் அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவர். மாஸ்கோ முற்றுகையிடப்பட்ட நேரத்தில் செம்படை வீரர்களைத் தவிர மற்றவர்கள் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர். அவருடைய அலுவலகத்தை சுற்றி குண்டுகள் வெடித்தன. அலுவலகக் கட்டிடம் அதிர்ந்துக் குலுங்கியது. ஸ்டாலின் நகரைவிட்டு வெளியேற மறுத்து குண்டு வீச்சுக்கு நடுவே தன் வேலைகளைச் செய்தார். அவரது வீரத்தைப் பின்பற்றி செம்படைப் போரிட்டது.
அறிவுக் கூர்மையில் லெனினுக்கு இணையாக விளங்கியவர். பிரச்சனைகளின் அடியாழத்தைப் புரிந்துக் கொண்டு சரியான தீர்வு சொல்லும் திறமை அவருக்கு இருந்தது. தோழர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கேற்றப் பொறுப்புகளைக் கொடுக்கும் தன்மை அவரிடம் இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பாட்டாளி வர்க்கத் தன்மையை கட்டிக் காக்க போராடினார். லெனின் உருவாக்கிய கட்சிக் கட்டுப்பாட்டை பாதுகாத்தார். கட்சியை பலவீனப்படுத்தும் எதிரிகள், துரோகிகளின் முயற்சிகளை முறியடித்தார்.
இந்த குணங்கள் ஸ்டாலினிடம் இருந்ததால் தான் அவரால் எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அறிவு புகட்டி, நம்பிக்கையூட்டி, கிளர்ந்தெழ வைத்து, கடும் சமர் செய்ய வைத்து இறுதியாக இட்லரை வீழ்த்த முடிந்தது.
போர் முடிவுக்கு வந்தாலும் ஸ்டாலினுக்கு ஓய்வில்லை. தரைமட்டமாக்கப்பட்டிருந்த சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. சோசலிச பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டியிருந்தது. மாபெரும் சரிவிலிருந்து மீண்டெழ வேண்டியிருந்தது. அதற்காக அவர் நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். சோவியத் மக்கள் போர் முனையில் காட்டிய வீரத்தை உற்பத்தியிலும் காட்டினர். சோதனைகளை உழைப்பினால் நான்கே ஆண்டுகளில் பழைய வளமான நிலைக்கு சோவியத் ரஷ்யா திரும்பியது. அதுமட்டுமல்ல பொருளாதார வளர்ச்சியில் உலகத்தில் முதலிடத்தையும் பிடித்தது சோவியத் ரஷ்யா.
இரண்டாம் உலகப் போர் வரை சோவியத் ரஷ்யா ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்தது. போர் முடிந்ததும் நிலைமை மாறியது. ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவுடைய வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா என ஏராளமான நாடுகளில் புரட்சி வெடித்தது. உழைக்கும் வர்க்கம் ஆட்சியை கைபற்றியது. சோசலிசம் மலர்ந்தது. எப்போதும் போல அமெரிக்க ஏகாதிபத்தியம் அவற்றை அழிக்க முயற்சி செய்தது. ஸ்டாலின் விழிப்புடன் இருந்து அந்த முயற்சிகளை முறியடித்து இளம் சோசலிச நாடுகளை பாதுகாத்தார்.
இந்த தொடர்ச்சியான கடும் உழைப்பு, ஸ்டாலினுடைய உடலை உருக்குலைத்தது. 1953 பிப்ரவரியில் அவர் நோய்வாய்பட்டார். வாழ்க்கையில் முதன்முறையாக அவர் ஓய்வை நாடினார். 1953 மார்ச் 5-ஆம் நாள் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு ஸ்டாலின் மரணம் அடைந்தார். ஆனால் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் இன்னும் வாழ்கிறார்; என்றும் வாழ்வார்.
இடலரின் ஒடுக்குமுறையிலிருந்து உலக உழைக்கும் மக்களை விடுவித்தது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செம்படை. அப்படையின் அனுபவத்தையும், பாட்டாளி வர்க்க ஆசானாகிய ஸ்டாலின் காட்டிய புரட்சிகர நடைமுறையையும் வரித்துக் கொள்வோம். அவரைப் போலவே நெஞ்சுரத்துடன் போராடுவோம்!
மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நமது நாட்டிலும் நக்சல்பாரி தலைமையில் புரட்சியை நடத்தி முடிப்போம்! புதிய ஜனநாயக அரசைக் கட்டியமைப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment