Monday, November 9, 2009

1. இட்லரின் பாசிசக் கனவு

People Friend Stalin 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி இரவு நேரம். ஜெர்மனியின் தலைநகர் பெர்லின். 20 லட்சம் பாசிஸ்டுகள்* கையில் தீப்பந்தங்களை ஏந்தியபடி ஊர்வலமாகச் செல்கின்றனர். அவர்களின் முகங்களில் இரத்தவெறி. கண்களில் பேராசை. கத்திகள், துப்பாக்கிகள் உயர்த்தி வெறியோடு கூச்சலிடுகின்றனர். பயந்துபோன பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அந்த அகால வேளையில் தான் இந்தப் பாசிஸ்டுகளுக்குத் தலைவனான இட்லர், ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றான். எதிர் காலத்தில் ஆறு கோடி உலக மக்களைக் கொலை செய்யப் போகும் அந்த மிருகத்தின் சுயரூபம் அன்று பலருக்கு தெரியவில்லை. ஆனால் அவன் தன் குறிக்கோளை வெளிப்படையாகவே அறிவித்தான். ஆரிய-ஜெர்மன் இனம் மட்டுமே வாழத் தகுதி படைத்த இனம்; யூதர்கள்**, கறுப்பர்கள், ஆசியர்கள், இந்தியர்கள் முதலானோர் மனிதர்களே அல்ல; அவர்கள் ஜெர்மானியர்களுக்கு அடிமையாக அடங்கி நடக்க வேண்டும்; ஆரிய ஜெர்மானிய இனம் உலகையே ஆளவேண்டும். இதுவே இட்லரின் பாசிசக் கனவு.

ஆல்பிரடு 20 வயது யூத இளைஞன். தனது வீட்டிற்குள் மறைந்தபடி ஜன்னல் வழியாக அந்த பயங்கரவாதிகளின் ஊர்வலத்தைப் பார்க்கிறான். பயத்தால் அவன் உடல் நடுங்கியது. கண்கள் இருண்டன. இட்லர் ஆட்சியில் உட்கார்ந்து விட்டான். யூத இனத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் வரை அவன் ஓயப்போவதில்லை. இனி யூதர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனையோடு ஆல்பிரடு ஜன்னல் ஓரமாக சரிந்து விழுந்தான்.

ரூடி, இவன் ஒரு இளம் தொழிலாளி; இவன் வேலை செய்த தொழிற்சாலையின் முதலாளி மூன்று மாதமாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறான். சம்பளம் கேட்ட தொழிலாளிகளை இட்லரின் அடியாட்களைக் கொண்டு அடித்து நொறுக்கினான். அதைக் கண்டித்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதைப் பற்றி விவாதிக்கவே ரூடியும் அவனது தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

பாசிஸ்டுகளின் வெறிக் கூச்சல் ரூடியின் காதிலும் விழுந்தது. இட்லர் ஜெர்மனியின் அதிபரான செய்தி கூடியிருந்தவர்களைக் கதி கலங்க வைத்தது. அந்த அறையில் மயான அமைதி நிலவியது. அடுத்து என்ன? அனைவரின் முகங்களிலும் இதே கேள்வி.

பாசிஸ்டுகள்* - மக்களிடையே இனவெறி / தேசவெறி / மதவெறியைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உழைக்கும் மக்களை அடிமையாக்கும் ஆதிக்கக் கூட்டம்.

யூதர்கள்** - யூத மதத்தைப் பின்பற்றுபவர்கள், 6 கோடி மக்கள் தொகைக் கொண்ட ஜெர்மனியில் 60 லட்சம் பேர்.

No comments:

Post a Comment